பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்காதது ஏன்? ஆளுநர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

வெள்ளி, 2 நவம்பர் 2018 (10:11 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்காதது ஏன் என ஆளுநர் தரப்பிலிருந்து அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்து விடுதலை செய்யலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் அறிவித்தது
 
இதன்படி சமீபத்தில் கூடிய தமிழக அமைச்சரவை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் தமிழக ஆளுநர் பன்சாரிலால் புரோஹித் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என தமிழகமே எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தது. ஆனால் இதுவரை ஆளுநர் தரப்பிலிருந்து எந்த ஒரு முடிவும் வெளிவராமல் இருக்கிறது.
 
இந்த விஷயத்தில் ஆளுநர் மவுனம் காப்பது ஏன் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட போது அவருடன் பலர் உயிரிழந்திருக்கின்றனர்.
 
ராகுல்காந்தியின் குடும்பம்  பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய சம்மதித்தாலும் அப்போது உயிரிழந்த பலரின் குடும்பத்தார்  7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கின் விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது.
 
இவ்வழக்குகள் எல்லாம் நிலுவையில் இருக்கும்போது, அவர்கள் 7 பேரை எப்படி விடுதலை செய்ய முடிவெடுப்பது என்ற குழப்பத்தில் தான் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இருப்பதாக தெரிகிறது.
 
ஆகவே பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரின் விடுதலை சம்மந்தமான வழக்குகள் அனைத்தும் முடிந்த பிறகே ஆளுநர் தனது முடிவை தெரிவிப்பார் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்