எடப்பாடியை மிரட்டும் மத்திய அரசு : பின்னணி என்ன?

வியாழன், 19 ஜூலை 2018 (10:13 IST)
தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்களை குறிவைத்து வருமான வரித்துறை நடத்தி வரும் ரெய்டுக்கான பின்னணி தெரியவந்துள்ளது.

 
முதல்நிலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.163 கோடி பணமும், 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுபோக பல ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
 
மேலும், செய்யாதுரையின்  எஸ்.பி.கே. நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளவரும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தியுமான சுப்பிரமணியை வருமான வரித்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். 4வது நாளாக இன்னும் சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பாஜக ஊழல் செய்ய வில்லையா? என தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக சார்பாக பேசும் கோவை செல்வராஜ் பேசியதும், தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி கொடுத்ததும் அமித்ஷாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும், அதன் விளைவாகவே பழனிச்சாமிக்கு நெருக்கமானவர்கள் குறி வைக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியானது.

 
தற்போது அதுமட்டும் காரணமில்லை என்பது தெரியவந்துள்ளது. அதாவது, கர்நாடாக தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்த்ததால், நிறைய இடங்களில் வெற்றி பெற்றும் பாஜகவால் அங்கு ஆட்சி அமைக்க முடியவில்லை. இது எடப்பாடிக்கு பாஜகவின் மீதான பார்வையை மாற்றியுள்ளதாம். நாடெங்கும் பாஜகவிற்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இனிமேல், மோடியை நம்பி பலனில்லை என அவர் தெரிவித்த கருத்து பாஜக மேலிடத்திற்கு சென்றதால்தான் இந்த ரெய்டு என்கிறார்கள்.
 
மற்ற மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பாஜகாவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. பாஜகவுடனான கூட்டணியை சந்திரபாபு நாயுடு முறித்துக்கொண்டு விட்டார். எனவே, ஆந்திராவில் பாஜகவின் திட்டம் பணாலாகி விட்டது. தமிழகத்தில் ஆர்.கே.நகரில் நோட்டோ பெற்ற ஓட்டுகளை கூட பாஜக பெறவில்லை. அதோடு, எடப்பாடியின் மனமாற்றமும் பாஜக மேலிடத்திற்கு கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
 
இதனாலேயே அவருக்கு நெருக்கமான உறவினர்கள் மீது ரெய்டு நடத்தப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்