தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வங்கி போல் மாற உள்ளதாகவும் பொதுமக்கள் தாங்கள் சேமித்த பணத்தை ரேஷன் கடைகள் மூலம் சேமிப்பு கணக்கு துவங்கி சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களையும் பதிவாளர் சுப்பையன் என்பவர் மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்று அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாய உறுப்பினர்களுக்கு பயிர் கடன், உரக்கடன், கால்நடை வளர்ப்பு கடன் உட்பட, பல வகை கடன்கள் வழங்கப்படுகின்றன.
கடந்த 2023ல், 18.36 லட்சம் விவசாயிகளுக்கு, 15,500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, சங்கங்களில் விவசாய உறுப்பினராக உள்ள நபர்களின் சராசரி வயது, 50. எனவே, அதிக இளைஞர்களை ஈர்க்கும் வகையில், புதிய வங்கியியல் திட்டங்களை வகுத்து, கூட்டுறவு நிறுவனங்களின் உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி, வங்கியால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில், மத்திய கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர் சராசரி வயது, 53 ஆக உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக நடத்தப்படும் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் வாங்கும் கார்டுதாரர்களுக்கு, பல்வேறு துறைகளின் நலத் திட்டங்களும், ரேஷன் கடை வாயிலாகவே வழங்கப்படுகின்றன.
கூட்டுறவு ரேஷன் கடைகள் வாயிலாக, கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு மற்றும் கடன் சேவை மக்களை சென்றடையும் வகையில், அப்பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில், சேமிப்பு கணக்கு துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து ரேஷன் கடைகளிலும், மத்திய கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு திட்டங்கள், நிரந்தர வைப்பு திட்டங்கள், கடன் திட்டங்கள் குறித்த கையேடு வினியோகிக்கவும், ரேஷன் கடை ஊழியர்களை கொண்டு, சேமிப்பு கணக்கு விண்ணப்பத்தை மக்களுக்கு வழங்க வேண்டும்.
ரேஷன் ஊழியர்கள் வாயிலாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறவும், பெறப்பட்ட விண்ணப்பங்கள் வாயிலாக துவக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு, கடை ஊழியர்களுக்கு தலா ஒரு கணக்குக்கு, 5 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
சேமிப்பு கணக்குதாரர்களுக்கு, கூட்டுறவு வங்கி கடன் திட்டங்கள், அரசின் கடன் திட்டங்கள், நிரந்தர வைப்பு திட்டங்கள் குறித்த கையேடுகள், வங்கியின் மின்னணு பரிவர்த்தனை வசதி, ஏ.டி.எம்., கார்டு வசதிகளை வழங்க வேண்டும்.
இதுகுறித்து, ரேஷன் கடை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள், பண்டகசாலை துணை பதிவாளர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி, மத்திய கூட்டுறவு வங்கிகளில் மக்கள், சேமிப்பு கணக்கு துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.