சுவாதியை கொலை செய்ததை ராம்குமார் ஒப்புக்கொண்டு விட்டார் : போலீசார் தரப்பு தகவல்
ஞாயிறு, 17 ஜூலை 2016 (11:10 IST)
சுவாதி கொலை குறித்து, போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்த ராம்குமார், தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமாரை போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது, அவர் கூறிய பல தகவல்களின் அடிப்படையில், இன்னும் 15 நாட்களுக்குள், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றி போலீசார் தரப்பில் ஒரு அதிகாரி கூறியதாவது :
சுவாதி கொலை குறித்து வழக்கறிஞர்கள், ஊடகங்கள், பத்திரிக்கைகள் என பலரும் பல்வேறு விவாதங்களை பேசி வருகின்றனர். ஆனால், ராம்குமார்தான் குற்றவாளி என்பதற்கு எங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருக்கிறது. அவருக்கு தண்டனை பெற்றுத் தர அந்த ஆதாரங்களே போதும்.
சுவாதியை கொலை செய்ததை பற்றி ராம்குமார் விரிவான வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் அவரின் நோக்கம், கொலை செய்தவிதம் பற்றி தெளிவாக கூறியுள்ளார். அவை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன்னுடைய காதலை சுவாதி ஏற்காததால் ஏற்பட்ட விரக்தியில் கோபம் அடைந்து அவர் இதை செய்துள்ளார். விசாரணையில் அவர் எதையும் மறைக்க வில்லை. உண்மையில், சுவாதியை கொலை செய்யும் நோக்கம் அவருக்கு இல்லை. தன்னை அசிங்கமாக சுவாதி விமர்சித்ததால், அவரின் முகத்தில் காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் நினைத்துள்ளார்.
ஆனால், ரயில் நிலையத்தில் கடைசியாக சுவாதியிடம் பேசிய போது, அவர் பேசிய முறையில் கோபம் அடைந்து அவரை கொலையும் அளவுக்கு போய்விட்டார். தடவியல் சோதனை முடிவுகள் வந்த பின், முழுமையான குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்பிப்போம்” என்று கூறினார்.