காரணங்கள் ஏற்க முடியவில்லை.......அன்பு வேண்டுகோளை ஏற்கிறேன்......ரஜினிகாந்த கவலை

சனி, 25 மார்ச் 2017 (15:53 IST)
இலங்கை தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் பங்கேற்க இருந்த ரஜினிகாந்தின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டது. அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று நான் இவ்விழாவில் கலந்துக்கொள்வதை தவிர்க்கிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


 


 
இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை லைக்கா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. அதனை நடிகர் ரஜினிகாந்த் மூலம் வழங்க உள்ளதாக லைக்கா அறிவித்தது. இதற்காக ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் ரஜினி இலங்கை செல்வதாக இருந்தார். 
 
ஆனால் ரஜினியின் இந்த பயணத்துக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் இலங்கையிலும் கூட பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருகிறது. ரஜினி அரசியலில் சிக்க வேண்டாம். அவர் இலங்கை செல்லக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ரஜினிகாந்த இலங்கைக்கு செல்ல வேண்டாம் என கோரியிருந்தார். 
 
இதையடுத்து இவர்களின் கோரிக்கையை ஏற்று தனது இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டதாக ரஜினிகாந்த தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
நான் அரசியல்வாதி அல்ல மக்களை மகிழ்விக்கும் கலைஞன். இலங்கை செல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், அதை அரசியலாக்கி தடுத்துவிடாதீர்கள். புனிதப் போர் நிகழ்ந்த பூமியை காணும் பாக்கியம் மீண்டும் கிடைத்தால் தடுக்காதீர்கள். வைகோ தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். திருமாவளவன் ஊடகம் மூலம் தெரிவித்தார். இவர்களின் கோரிக்கைகளை ஏற்று தற்போது இந்த பயணத்தை ரத்து செய்துள்ளேன். 
 
பல அரசியல் காரணங்களை முன்வைத்து இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ளக்கூடாது என்று அன்புடன் கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் சொன்ன காரணங்களை முழுமனதுடன் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் அவர்களுடைய அன்பு வேண்டுகோளை ஏற்று நான் இவ்விழாவில் கலந்துக்கொள்வதை தவிர்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்