புதுச்சேரி – விழுப்புரம் மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள புதுக்குப்பம், செட்டிப்பட்டு, திருபுவனை உள்ளிட்ட பல கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக அமாவாசை அன்று திருட்டு நடைபெறுவது தொடர்கதையாக இருந்து வந்தது. அமாவாசை வந்தாலே கிராம மக்கள் பீதியில் மூழ்கும் அளவிற்கு அமாவாசை திருடர்களின் கைங்கர்யம் இருந்து வந்தது.
சமீபத்தில் செட்டிப்பட்டு கிராமத்தில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவர் வீட்டிலேயே அமாவாசை திருடர்கள் கை வைத்தனர். அதை தொடர்ந்து அமாவாசை திருடர்களை பிடிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ரோந்து சென்ற போலீஸார் சந்தேகத்திற்கிடமாக சாலையில் மூட்டை முடிச்சுகளுடன் வந்த இருவரை பிடித்துள்ளனர். கியாஸ் அடுப்பு, சிலிண்டர் முதற்கொண்டு தூக்கி கொண்டு வந்த அவர்களை போலீஸார் பிடித்து விசாரித்தபோது புதுச்சேரி கிராமங்களை கடந்த சில ஆண்டுகளாக பீதியில் ஆழ்த்தி வந்த அமாவாசை திருடர்கள் அவர்கள்தான் என தெரிய வந்துள்ளது.
அமாவாசை அன்று ஒரு வீட்டிலிருந்து நகைகள், பணம் உள்ளிட்ட பலவற்றை தேட்டை போட்டு வந்தபோது போலீஸில் சிக்கியுள்ளனர். விசாரணையில் அவர்கள் பெயர் அய்யனார், சீனுவாசன் மற்றும் தமிழ்நாஜ் என தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும் அமாவாசையில் கொள்ளையடித்து அந்த பணத்தில் பல சுற்றுலா பகுதிகளுக்கு சென்று இவர்கள் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ள போலீஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அமாவாசை திருடர்கள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.