ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடுவதா? போக்குவரத்து தொழிலாளர்கள் ஆவேச ஆர்ப்பாட்டம்!

சனி, 27 பிப்ரவரி 2021 (14:59 IST)
தேர்தல் நடத்தை விதியிலும் ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடுவதா அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆவேச ஆர்ப்பாட்டம். 

 
கோவை. பிப்ரவரி. 27- ஆளும் கட்சியின் நிர்பந்தம் காரணமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க நிர்வாகிகளை இரவோடு இரவாக இடமாற்றம்  செய்ததை கண்டித்து கோவையில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்க வலியுறுத்தி  காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மூன்றாவது நாளாக வெற்றிகரமாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில்  வெள்ளியன்று  கோவை சுங்கம் பணிமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அதிமுக தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அவமரியாதையாக பேசியுள்ளனர். இதனையடுத்து இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தொழிற்சங்க மூத்த தலைவர்கள் அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
 
இந்நிலையில் சிஐடியு, எல்பிஎப் தொழிற்சங்க நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கத்தோடு ஆளும் கட்சியின் நிர்பந்தம் காரணமாக போக்குவரத்து நிர்வாகம் இரவோடு இரவாக இடமாறுதல் உத்தரவு வழங்கியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பின்னும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக போக்குவரத்து நிர்வாகம் ஜால்ரா அடிப்பதாக குற்றம் சாட்டி தொழிற்சங்க கூட்டுகமிட்டி சார்பில் சுங்கம் பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.
 
இதுகுறித்து சிஐடியு பொதுச்செயலாளர் வேளாங்கண்ணி ராஜ் கூறுகையில், கோவை மண்டலத்தில் சுங்கம்-2கிளை முன்பாக கூட்டமைப்பு சார்பாக வெள்ளியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏடிபி சங்கத்திற்கும், எங்கள் கூட்டமைப்பிற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையில் ஆளும் கட்சியின் அழுத்தம் காரணமாக கழகத்தின் எம்டியும், ஜிஎம் ஆகியோர் தண்டனை அடிப்படையில்  கட்டாய இடமாறுதல் கொடுத்துள்ளார்கள்.
 
 உடனடியாக பணி மாற்றம் செய்யப்பட்ட அவர்கள் மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்த வேண்டும். அதுவரை எங்கள் போராடம் தொடரும் என்றார். முன்னதாக கோவை மாவட்டத்தில் 80 சதவீதத்திற்கும் பேருந்துகள் இயங்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்