மு.க.ஸ்டாலினை சந்தித்த பிரசாந்த் கிஷோர்! – அரசியல் வியூகம் ஆரம்பம்!

புதன், 11 டிசம்பர் 2019 (13:33 IST)
அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் திமுக இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான அரசியல் வியூகங்கள் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

தேசிய அளவில் தேர்தல் நிலவரங்களை கணிப்பதிலும், அரசியல் வியூகங்கள் அமைப்பதிலும் முன்னனியில் இருப்பது அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரின் “ஐ பேக்” நிறுவனம். 2014 பாராளுமன்ற தேர்தல் மற்றும் பீகார், ஆந்திரா சட்டசபை தேர்தல்களிலும் பிரசாந்த் கிஷோர் வியூகம் அமைத்து கொடுத்த கட்சிகள் வெற்றிபெற்றிருக்கின்றன.

இந்நிலையில் தமிழக கட்சிகள் பல பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளை பெற திட்டமிட்டு வந்தன. சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் இணைந்த பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூக பணிகளை வகுத்து கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் அதிலிருந்து வெளியேறினார். இதற்கான காரணங்கள் தெரியாவிட்டாலும் தமிழகத்தில் பாஜகவை பிரபலப்படுத்த பிரசாந்த் கிஷோரை தமிழக பாஜக அணுக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் திடீரென திமுக தலைவர் ஸ்டாலினோடு பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல்களில் திமுக வெற்றி பெறவும், மேலும் கள நிலவரங்களை கணக்கில் கொண்டு சட்டசபை தேர்தலுக்கான வியூகங்களை திமுகவிற்கு அமைத்து கொடுப்பதற்காகவும் பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்