டாஸ்மாக் கடையை அகற்ற கண்டன ஆர்பாட்டம்

வியாழன், 5 ஜனவரி 2017 (20:43 IST)
திருவாரூர் மாவட்டம் ​மணக்கால் ​கிராம பஞ்சாயத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை (எண்:9711) அகற்றக்கோரி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கடையை அகற்றக்கோரி தொடர்முயற்சியில் ஈடுபட்டு வரும் அக்கிராம மக்கள், இன்று அக்கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



 
உரிய முறையில் அரசுக்கு மனு அளித்தல், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை வைத்தனர். டாஸ்மாக் கடையை அகற்றக்கோரும் பஞ்சாயத்து தீர்மானம் இருந்தால் மதுபானக்கடையை நிரந்தரமாக அகற்றலாம் என்று கடந்த 16.11.2016 அன்று உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு விண்ணப்பம், தொடர் அடையாள உண்ணாவிரதம் எனப் பல அறப்போராட்டத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய ஆர்ப்பாட்டம்​ ​நடைபெற்றது.
 
நீரின்றி பயிர்கள் வாடிவரும் நிலையிலும் திருவாரூர் மாவட்டத்தில் கிராம மக்கள் தெருவில் இறங்கிப் போராடினர்.  
 
இப்போராட்டத்தை ஒருங்கிணைத்த தென்னரசு கூறுகையில், "எங்கள் கிராம மக்களுக்குப் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது இந்த டாஸ்மாக் கடை. பலர் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடை மேலும் மக்களின் வாழ்க்கையைச் சீரழிக்கிறது. இன்றைக்குக் கிராம மகளிர் பலர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமென நம்புகிறோம்" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்