குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராகவும், டெல்லியில் மாணவர்கள் மீது போலீசார் தாக்கியதற்கு எதிராகவும் இந்தியா முழுவதும் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த ஒரு பக்கம் அரசு தீவிர முயற்சி செய்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் ஒருசில அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்தை மேலும் தூண்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன. திருவாரூர் மத்திய பல்கலை கழகத்திற்கு ஜனவரி 20ஆம் தேதி வரையிலும், சென்னை பல்கலைக்கழகத்திற்கு டிசம்பர் 23-ஆம் தேதி வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தீவிர போராட்டம் நடத்தி வரும் நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும் பல்கலைக்கழகத்திலிருந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் பல்கலைக்கழக வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது