திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சியில் உள்ள எம்.ஏ. நகரை சேர்ந்த சயன் தனது மனைவி கீதாவுடன் வசித்து வருகிறார். வீட்டை விரிவாக்கம் செய்ய கோவையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.43 லட்சம் கடன் பெற்றார். அதனை வைத்து மேலும் 6 வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டார்.
2 வருடங்களாக அவர் முறையாக கடன் செலுத்தி வந்தார். ஆனால் 4 மாதங்களுக்கு முன்பு சயனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் சிகிச்சை பெற்றார். இதனால் கடன் தொகையை செலுத்த முடியாமல் போனார். டிஸ்சார்ஜ் ஆகி திரும்பிய சயன், ஒரு வாரத்திற்கு முன் 4 மாத பாக்கி பணத்தை கட்டினார்.
ஆனால் அந்த தொகை செயலாக்க கட்டணமாகவே பயன்படுத்தியதாக நிதி நிறுவன ஊழியர்கள் கூறினர். பின்னர் நிறுவனம் சார்பில் வந்த 30 பேர் சயனின் வீடு மற்றும் வாடகைக்கு விட்டிருந்த 6 வீடுகள் என மொத்தம் 7 வீடுகளுக்கும் சீல் வைத்து, நோட்டீஸ் ஒட்டினர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.