பிரபல சாமியார் இரண்டு சிறுவர்களை நரபலி கொடுத்து புதைக்க சொன்னாரா?
திங்கள், 24 அக்டோபர் 2016 (11:16 IST)
சேத்தியாத்தோப்பில் உள்ள கருப்புசாமி கோவில் குறி சொல்லும் சாமியார் ஆறுமுகம் நரபலி கொடுத்தார் என்ற புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் கதிரேசன் என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன், ஐயனார் கோவில் சிலையை கொண்டு வந்து வந்து சாலையின் ஓரத்தில் உள்ள புளியமரத்தடி புறம்போக்கு இடத்தில் வைத்து குறி சொல்லி வந்தார்.
ஆனால், கடந்த 2006ஆம் ஆண்டு நெல்லிக்குப்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சிறுவனை நரபலி கொடுத்த விவகாரத்தில் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆயுள் தண்டனை பெற்ற அவர் இறந்தார்.
பின்னர், ஆறுமுகம் என்பவர் சாமியார் கதிரேசனின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு கோவிலில் குறிசொல்லி வந்தார். இந்நிலையில் சாமியார் ஆறுமுகம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் வந்தது.
இடத்தை ஆய்வு செய்தபோது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் என்று உறுதி செய்து ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சாமியார் ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியதால் அதிகாரிகள் ஆக்கிரிமிப்பை அகற்றாமல் சென்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை மிராளூரை சேர்ந்த கணேசன் என்பவர், சாமியார் 2 சிறுவர்களை நரபலி கொடுத்ததாகவும், அந்த 2 சிறுவர்களின் உடலை மூட்டையில் கட்டி கோவிலுக்கு பின்புறம் உள்ள வாய்க்கால் ஓரமாக புதைக்கும்படி கூறியதாகவும், இதனால், தானே அந்த மூட்டையை எடுத்து சென்று புதைத்ததாகவும் அங்குள்ள பொதுமக்களிடம் கூறி வந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த சேத்தியாத்தோப்பு காவல் துறையினர் கணேசனை விசாரணை செய்துள்ளனர். பல மணி நேரம் நீடித்த விசாரணைக்கு பின்னர் கணேசன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். புகாரின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சாமியாரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.