41 தொகுதிகள் தருபவர்களுடன் கூட்டணி: பேரத்தை முன்வைத்த பிரேமலதா?

திங்கள், 14 டிசம்பர் 2020 (09:34 IST)
சட்டமன்ற தேர்தலிலும் 41 தொகுதிகளை தரும் கட்சிகளுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்கும் என பிரேமலதா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் வர இருக்கும் நிலையில் அதிமுக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இன்னும் அந்த கூட்டணியில் இருப்பதை உறுதி செய்யவில்லை. இதனிடையே தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. 
 
இதன் பின்னர் செய்தியார்களை சந்தித்து பேசினார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். அப்போது அவர், 2021 சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது. தேர்தலில் தேமுதிக நிலைப்பாடு என்ன? கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதா, அல்லது தனித்து போட்டியிடுவதா என்று கேள்விகள் எழுந்துள்ளன. 
ஜனவரி மாதம், தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்க இருக்கின்றது. அந்தக் கூட்டத்தில் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து விஜயகாந்த் அறிவிப்பார். வயது மற்றும் உடல் சோர்வு காரணமாக விஜயகாந்த் முன்புபோல இப்போது சுறுசுறுப்பாக இல்லை. 
 
எனினும் தேர்தல் பிரசார காலத்தின் ‘கிளைமாக்சில்’ விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்வார். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விஜயகாந்தின் பிரசாரம் நிச்சயம் இருக்கும். எம்ஜிஆருக்கு பிறகு ஏழை மக்களின் வாழ்வு நலம்பெற பாடுபட்டு வருபவர், விஜயகாந்த். 
 
2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் மாபெரும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது தேமுதிக. அதேபோல, வர இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் 41 தொகுதிகளை தரும் கட்சிகளுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்கும். இல்லை எனில், தேமுதிக தனித்து களமிறங்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்