டாஸ்மாக் மது என்ன கொரோனா தடுப்பு மருந்தா? பிரேமலதா!!

வியாழன், 7 மே 2020 (15:28 IST)
டாஸ்மாக் மது என்ன கொரோனா தடுப்பு மருந்தா என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் 43 நாட்களாய் மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.   
 
சென்னை உள்ளிட்ட சில பகுதிகளை தவிர அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல பகுதிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவை வாங்கி செல்கின்றனர்.  
 
பல இடங்களில் ஒருவருக்கு ஒரு மது பாட்டில் மட்டுமே வழங்கப்படும் என விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார் அவர் கூறியதாவது, 
 
கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் ஸ்தம்பித்து உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான அவசியம் என்ன? தமிழகத்தை பொறுத்தவரை வசதியானவர்களை விட வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், நடுத்தர குடும்பத்தினர் மற்றும் கிராமப்புறத்தினர் தான் அதிகமாக உள்ளார்கள்.
 
பள்ளி, கல்லூரிகள், கோயில்கள், தொழிற்சாலைகள் ஏதும் திறக்கப்படாத நிலையில் யாரும் கேட்காத டாஸ்மாக் கடையை திறக்க என்ன அவசியம். வருமானமே இல்லாத இந்த நேரத்தில் குடும்ப பெண்கள் இருக்கக்கூடிய பணத்தை வைத்து குடும்பத்தை நடத்த திட்டமிடுவார்கள். 
 
ஆனால் அந்த பணத்தை மது பிரியர்கள் வன்முறை மூலம் பெற்றுக் கொண்டு மதுக்கடைக்கு செல்லக்கூடிய அவல நிலை ஏற்படும். எனவே அரசுக்கு வருவாய் வேண்டும் என்ற காரணத்திற்காக மதுக்கடையை திறக்கக் கூடாது என பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்