வீடு புகுந்து வாலிபர்களை அடித்து இழுத்து செல்லும் போலீசார்: தூத்துக்குடி மக்கள் புகார்

வியாழன், 24 மே 2018 (17:53 IST)
தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் வீடு புகுந்து அடித்து, இழுத்து செல்கின்றனர் என பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

 
தூத்துகுடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று முன் தினம் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 11 பேர் பலியாகிய நிலையில் நேற்றும் இரண்டாவது நாளாக துப்பாக்கி சூடு நடந்தது.
 
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் பலியாகிய நிலையில் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவரும் இறந்ததால் கடந்த இரண்டு நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
 
நேற்று தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவர்களை நோக்கி பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் கற்களை வீசு தாக்குதல் நடத்தினர். 
 
இந்நிலையில், அண்ணாநகர் பகுதியிலுள்ள வீடுகளில் புகுந்து அங்குள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தடியால் தாக்கி போலீசார் இழுத்து செல்வதாக தகவல் வெளிவந்துள்ளது. போலீசாருக்கு பயந்து வீட்டை பூட்டியிருந்தாலும், அதை உடைத்து போலீசார் உள்ளே புகுந்து அராஜகம் செய்வதாக அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க தொலைக்காட்சிகளில் பேட்டியளித்து வருகின்றனர்.
 
எங்களை கல்லால் தாக்கியவர்களை விட மாட்டோம் என போலீசார் கூறுவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்