காவிரியில் தொடர்ந்து நடைபெற்று வந்த மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி பொதுமக்களை திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் காவேரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன். மேலும், ஜல்லிகட்டு போராட்டம் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் என பல்வேறு சமூகத்தை பாதிக்கும் பல்வேறு விஷயங்கள் தொடர்பான போராட்டங்களிலும் பங்கெடுத்து அரசிற்கு எதிராக போராடினார்.
முகிலனை பாளையங்கோட்டை சிறையில் இருந்து மதுரை சிறைக்கு இடம் மாற்றி, மூன்று ஆண்டுகளாக சுத்தம் செய்யப்பாடத தனிமையில் சிறையில் அடைத்தனர். இதனால் கொசுக்கள் கடித்து மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டதை தனது அதரவாளர்களுக்கு தெரிவித்தார். இதனை தொடர்ந்து 6-ம் தேதி கோர்ட்டில் முகிலனை ஆஜர்படுத்தினால் தங்களுக்கு சிக்கல் வரும் என்பதை உணர்ந்த காவல் துறையினர் வீடியோ கான்பரசிங் மூலம் கடந்த 6-ம் தேதி ஆஜர்படுத்தி பிரச்சனையை சமாளித்தனர்.
இந்நிலையில் அவரை இன்று கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி சுப்பையாவிடம் தனது சட்டை கழட்டி தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை காட்டி வழக்கு தொடர்பாக நீதிபதி கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். இதனை தொடர்ந்து முகிலனை மூண்டும் வரும் 26-ம் தேதி காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்திரவிட்டார். நீதிமன்றத்தை விட்டு வெளியே அழைத்து வந்த முகிலனை செய்தியாளர்கள் படம்பிடிக்க விடாமலும், முகிலனிடம் விவரம் கேட்கவிடாமலும் காவல் துறையினர் தடுத்தனர். இதனால் நீதிமன்றவளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.