நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மெகாக் கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
எதிர்ப்புறமான அதிமுக கூட்டணியில் பாஜக இணைவது உறுதியாகியுள்ள நிலையில் வேறு எந்தக் கட்சிகளும் ஆர்வம் காட்டாத சூழல் உருவாகியுள்ளது. ஆனால் அந்தக் கூட்டணியில் தேமுதிக வையும் பாமக வையும் இணைக்க பாஜக தீவிரமாக வேலை செய்து வருகிறது. கூட்டணி குறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் பாமகவின் ராமதாஸோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் இப்போது இரண்டுக் கட்சிகளோடும் கூட்டணி அமைக்காமல் டிடிவி தினகரனின் அமமுக வோடு கூட்டணி அமைத்து மூன்றாவது அணியை உருவக்கலாம் என்ற ஒரு எண்ணமும் பாமக தலைமையின் மனதில் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. அதை உறுதிப்படுத்துவது போல டிடிவி தினகரனும் கூட்டணி தொடர்பாக 5 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என அறிவித்துள்ளார்.
பாஜக இருக்கும் கூட்டணியில் நாம் இருந்தால் அது நமக்குக் கண்டிப்பாக பலவீனம்தான், அதனால் திமுக விடம் இருந்து அழைப்பு வந்தால் அங்கு செல்லலாம். இல்லையென்றால் அமமுகவோடுக் கூட்டணி அமைக்கலாம் என்ற முடிவில் பாமக தலைமை உள்ளதாக தெரிகிறது. அப்படி ஒருவேளை அந்தக் கூட்டணி அமைந்தால் தமிழ்நாட்டில் மும்முணைப் போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.