நீரோ மன்னனின் வாரிசு எடப்பாடி பழனிசாமி: டாக்டர் ராமதாஸ் விளாசல்
செவ்வாய், 3 ஜூலை 2018 (08:50 IST)
அதிமுக, திமுக என மாறி மாறி இரண்டு திராவிட கட்சிகளையும் அவ்வப்போது விமர்சனம் செய்து வரும் பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ், இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யும் விழாவிற்காக தேவையில்லாமல் அனைத்து பேருந்துகளையும் முதல்வர் சென்னைக்கு வரவழைத்து போக்குவரத்து துறைக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளதாக டாக்டர் ராம்தாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதிய பேருந்துகளின் சேவைத் தொடக்கவிழா தலைமைச் செயலக வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. விழா நடைபெறும் இடத்தில் அதிகபட்சமாக 5 பேருந்துகளைக் கூட நிறுத்த முடியாது. இதற்காக சென்னையில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றுக்குச் சொந்தமான பேருந்துகளை மட்டும் வைத்து இந்த விழாவை சிறப்பாகவும், நிறைவாகவும் நடத்த முடியும். ஆனால், தம்மை ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீண் பகட்டு காட்டுவதற்காகவே தமிழகம் முழுவதிலும் இருந்து புதிய அரசுப் பேருந்துகளை சென்னைக்கு வரவழைத்திருக்கிறார். புதிய பேருந்துகளில் பெரும்பாலானவை சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு புதிய பேருந்தும் சென்னைக்கு வந்து செல்வதற்காக குறைந்தது 400 கிலோ மீட்டர் முதல் 1,500 கி.மீ. வரை பயணிக்க வேண்டும். சென்னைக்கு வருவதற்குப் பதிலாக அவை அவற்றுக்குரிய வழித்தடங்களில் இயக்கப்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.15,000 வீதம் இரு நாள்களில் ரூ.30,000 வரை வருவாய் ஈட்டியிருக்கக்கூடும். ஆனால், வழித்தடங்களில் இயக்கப்படாமல் வீணாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, மீண்டும் வீணாக அவற்றின் பணிமனைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இரு நாள்களில் மட்டும் குறைந்தப்பட்சம் ரூ.1.63 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, இந்த விழாவுக்காக ஒவ்வொரு பேருந்தையும் அலங்காரம் செய்வதற்காக மட்டும் தலா ரூ.5 ஆயிரத்துக்கும் கூடுதலாக செலவழிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்த வகையில் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக ரூ.27.10 லட்சம் வீண் செலவு ஏற்படும். தொடக்க விழாவுக்காக சென்னைக்கு கொண்டு வரப்படும் புதிய பேருந்துகளை முதல்வரோ, அதிகாரிகளோ பார்வையிடக்கூட போவதில்லை. விழா முடிந்து பணிமனைக்கு திரும்பும்போதுகூட அவற்றில் பயணிகள் அனுமதிக்கப்படப் போவதில்லை. இவ்வாறு எந்த தேவையும், பயனுமின்றி முதலமைச்சரின் ஈகோவை திருப்திப்படுத்துவதற்காக மட்டும் அரசு வளம் வீணடிக்கப்பட வேண்டுமா?
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான கடன் சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் 0.13 காரணி மடங்கு கூடுதல் ஊதியம் கோரியபோது, அதை வழங்க அரசு மறுத்து விட்டது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை. இவ்வளவு பிரச்னைகள் இருக்கும்போது ஒன்றுக்கும் உதவாத முதலமைச்சரின் ஆடம்பர ஆசைக்காக 542 பேருந்துகளையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது. ஒருபுறம் மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்துக்கொண்டு, இன்னொரு புறம் ஆடம்பரத்தில் திளைத்துக்கொண்டிருக்கும் நீரோ மன்னனின் வாரிசான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மக்கள் தண்டிக்கும் காலம் தொலைவில் இல்லை''
இவ்வாறு டாக்டர் ராம்தாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.