ரிலையன்ஸின் விளம்பரத் தூதர் பிரதமர் மோடி! - ஊழியர்கள் சங்கம் வேதனை

வெள்ளி, 30 டிசம்பர் 2016 (03:20 IST)
ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருக்கிறார் பிரதமர் மோடி என்று பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.அபிமன்யூ கூறியுள்ளார்.


 

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தின் 8வது அகில இந்திய மாநாடு டிசம்பர் 31ம் தேதி துவங்கி ஜனவரி 3ம் தேதி வரை சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது.

இது குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.அபிமன்யூ செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கடந்த 7 வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வந்த இந்நிறுவனத்தை வளரவிடாமல் முடக்கியது அரசுதான் என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தது உண்மை.

2007ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை நெட் ஒர்க்குக்கு தேவையான கருவிகளை வாங்க விடாமல் அரசு தடுத்தது. 4.5 கோடி புதிய செல்போன் இணைப்புகள் வழங்குவதை அமைச்சராக இருந்த ஆ.ராசா தன்னிச்சையாக ரத்து செய்தார்.

அதேபோல் 2010ஆம் ஆண்டு 9 கோடி இணைப்புகளுக்குத் தேவையான புதிய கருவிகள் வாங்குவதை உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது.

8,300 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய பிஎஸ்என்எல் நிறுவனம் அதிகாரிகள் - ஊழியர்கள் இணைந்து செயல்பட்டதன் காரணமாக 2015-16ஆம் ஆண்டு 3,000 கோடி ரூபாயாக குறைந்தது.

இந்நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக தனியார் நிறுவனங்களை பாஜக அரசு மேம்படுத்துகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருக்கிறார் பிரதமர் மோடி. ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்