முடிவு கட்டலாம் கொரோனவுக்கு... தமிழகத்தில் திறக்கப்பட்டது பிளாஸ்மா வங்கி!

வியாழன், 23 ஜூலை 2020 (13:43 IST)
தமிழகத்தில் முதல் முறையாகவும், இந்தியாவில் இரண்டாவதாகவும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் விதமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கி திறக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பிளாஸ்மா வங்கியை திறந்து வைத்தார். அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். 
 
பிளாஸ்மா வழங்கும் மையத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா பிரித்தெடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்த 14 நாட்களுக்குப் பிறகு பிளாஸ்மா தானம் செய்யலாம்.
 
18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யத் தகுதியானவர்கள். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய் இருப்பவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது. தகுதியான கொடையாளர்களிடம் இருந்து அதிகபட்சமாக 500 மில்லி லிட்டர் பிளாஸ்மா எடுக்கப்படுகிறது.
 
இந்த பிளாஸ்மா வங்கியில் ஒரே நேரத்தில் 7 நபர்கள் வரை பிளாஸ்மா தானம் அளிக்க இயலும். தானமாகப் பெறப்பட்ட பிளாஸ்மா செல்களை 40 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில் வைத்து முறையாக பாதுகாக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
 
இவ்வாறு பாதுகாக்கப்பட்ட பிளாஸ்மாவை ஓராண்டு வரை சேமித்து வைத்து கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும். தமிழகத்தில் சென்னை திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மேலும் 7 அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை விரிவுப்படுத்தப்பட இருக்கிறது.
 
முதல் நாள் நிகழ்ச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் நலம் தேறிய பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் உட்பட 2 பேர் பிளாஸ்மா தானம் அளித்தனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்