கரூரில் மதுக்கடை நடத்திய நபர் : போராட்டம் நடத்திய பொதுமக்கள் (வீடியோ)

வியாழன், 19 ஏப்ரல் 2018 (15:50 IST)
கரூரில் செய்தியாளர் என்ற போர்வையில் சந்துகடை நடத்தியதை எதிர்த்து ஊர் பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டம் நடத்தியதால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்காவிற்குட்பட்ட குளத்தூர்பட்டி பகுதியில் அனுமதியின்றி மதுபானகடையை(சந்துகடை) நடத்தி வருவதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் கரூர் தாராபுரம் சாலையில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரித்த போது தமிழகத்தின் முன்னனி செய்தி சேனல் நிறுவனத்தின் அரவக்குறிச்சி செய்தியாளராக இப்பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் பணிபுரிந்து வந்தார். 
 
ஆனால் இவர் செய்தி சேகரிப்பதை காட்டிலும் செய்தி சேனலின் பெயரை சொல்லி வசூல் வேட்டையில் ஈடுபடுவது மற்றும் சமூக விரோத செயலிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் செய்தி சேனல் நிறுவனம் அவரை செய்தியாளர் பொறுப்பில் இருந்து விலக்கியது. 
 
இதனை தொடர்ந்த அந்த நபர் கண்ணன் இணையதள சேனல் ஒன்றின் மாவட்ட நிருபராக பணியாற்றி வருவதாக கூறினார். இதனிடையே குளத்தூர்பட்டி பகுதியில் அனுமதி இன்றி சந்துகடையை நடத்தி வந்துள்ளார். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை செய்து சம்பந்தபட்ட கண்ணன் என்பவரை கைது கைது செய்தனர். இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
 
இதுகுறித்து அப்பகுதியை சேந்த இளைஞர் முருகானந்தம் கூறும் போது அரசு பெரும்பாலன மதுக்கடைகளை மூடிய போது சந்துகடைகளை அதிகமாக ஆரம்பித்து விட்டனர். இதனால் பொதுமக்கள் மற்றும் இளம்பெண்கள் நடமாட முடியாத நிலையாக உள்ளது. இதுகுறித்து சம்பந்தபட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரியநடவடிக்கை எடுக்காததால் இன்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
-சி.ஆனந்த குமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்