நீதி தேவதை கையில் இருக்கிறது..தமிழகம்: பட்டுக்கோட்டை பிரபாகர்

செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (12:37 IST)
கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அவரே முதல்வராக வேண்டும் என தற்போதைய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். வருகிற 9ம் தேதி தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது.


 

சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு தமிழக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்கள் மற்றும் படைப்பாளிகள் என பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் சமூக வலைதளத்தில் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-


அவருக்கு நிர்வாகத் திறன் இருக்கிறதா?

அவர் வீட்டில் ஒரு உதவியாளராகத்தானே இருந்தார்?
அவருக்கு ஜெயலலிதா ஒரு கவுன்சிலர் பதவிகூட தரவில்லையே..?
அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கினாரே?

அம்மாவின் கனவுகளை நிறைவேற்றுவோம் என்கிற முதல் வரியே அடி வாங்குகிறதே.. (அம்மாவின் கனவில் இப்படி ஒரு காட்சி இல்லவே இல்லையே...)

ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம் என்பது எப்படி சரியாகும்?

 நேரடி சர்வே எதுவும் எடுக்கப்படவில்லையே? தீபா வீட்டு முன்னாலும் பல ஊர்களிலும் ஆதரவு தெரிவித்து வருபவர்கள் இந்த ஒன்றரை கோடிக்குள் இருக்கிறார்களே..? பொதுச் செயலாளரானது இந்த ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு மட்டும்தானே.. ஆனால் முதலமைச்சராவது எட்டு கோடி மக்களுக்கும் சேர்த்து அல்லவா?

ஓபிஎஸ் அவர்களை இப்போது அவசரமாக மாற்ற வேண்டிய அவசியம்தான் என்ன? மக்களுக்காக நான் என்று நீங்களும் முழங்கப் போகிறீர்கள் என்றால் அந்த மக்களைச் சந்தித்து ஜனநாயகத்தை மதித்து இடைத் தேர்தலில் நின்று மக்களால் தேர்வு செய்யப் பட்ட பிறகு கம்பீரமாக இந்த முடிவெடுக்கலாமே?

- இப்படியெல்லாம் அரசியல் தலைவர்கள், நோக்கர்கள், மீடியாக்கள், பொது மக்கள் என்று பலதரப்பட்டவர்களால் பல கேள்விகள் வைக்கப்படுகின்றன.

ஆனால்..பெரும்பான்மை சட்ட மன்ற உறுப்பினர்கள் யாரைத் தேர்வு செய்தாலும் அவருக்கு சட்டப்பூர்வமான தகுதி வந்துவிடுகிறது. சட்டப்படி சரியாக இருக்கும் ஒன்று தார்மீக அடிப்படையிலும் சரியாக இருத்தலே அறமாக இருக்க முடியும்.

அவர்மீது நீதிமன்றத்தில் ஊழல் குற்றச் சாட்டு வழக்கின் தீர்ப்பு நிலுவையில் இருக்கும்போது.. அதன் தீர்ப்பு வெளிவந்த பிறகு.. அவர் சட்டப்படி குற்றமற்றவர் என்று நிரூபனமானால் அதன் பிறகு இந்த முடிவுக்கு வருவதே முறையாக இருக்க முடியும்.

நீதி தேவதை கையில் இருக்கிறது..தமிழகம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்