வரிப்பணத்தை ஏழைகளுக்கு பயன்படுத்திய பின்னர் ராக்கெட் விடலாம்: புயல் பாதிப்பு குறித்து பார்த்திபன்..!

வியாழன், 7 டிசம்பர் 2023 (07:50 IST)
மக்கள் வரிப்பணத்தை ஏழைகளுக்கு பயன்படுத்திய பின்னர் சந்திராயனுக்கு ராக்கெட் விடலாம் என புயல் பாதிப்பு குறித்து நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 
 
நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன்.ஏன் இந்த அவல நிலை?சென்னை மட்டுமல்ல,சமீபத்தில் கண்டுங்காணா குண்டுங்குழி நிறைந்த மும்பாபையிலும்(பணக்கார முதலைகள் சாலையை கடக்கும் மாநிலம்)இதே நிலை. 
தனி மனிதனாகவும், தமிழ்நாடாகவும்,வல்லரசு(?) நாடாகவும், இந்தியா தன்னிறைவடையாத (தண்ணீரும் வடியாத)நாடு!
 
தண்ணீர் இருக்கிறதா?என ஆராய, சந்திரனுக்கு சந்திரயானும், செவ்வாய்க்கு செங்கல்வராயனும் அனுப்ப பல்லாயிரம் கோடி ஏன் செலவழிக்க வேண்டும்? ஒரு ப்ளாஸ்டிக் படகு எடுத்துக் கொண்டு (வேளச்)ஏரிக்குள் கட்டப்பட்டிருக்கும் lake view apartments-க்கு மிக அருகாமையில் நிறைமாத நீரை பார்வையிடலாமே? 
 
அதிவேக புல்லட் ரயில், அதிநவீன தொழில் நுட்ப முன்னேற்றம் இப்படிப்பட்ட நாளைய இந்தியப் பெருமையில் எருமை urine போக! அடிப்படை தேவைகள்,வேலை வாய்ப்புகள்,சாலை வசதிகள்,மாசற்ற காற்று,இயற்கை சீற்றங்களை எதிர் கொள்ளும் இடரற்ற சக்தி, ஏழை மக்களும் எதற்கும் கையேந்தாமல் கவுரவமாக வாழும் உயர்நிலை இவைகளை வழங்க, வழங்கும் வரி பணத்தையெல்லாம் பயன்படுத்திவிட்டு பின்பு வுடலாம் ராக்கெட்டு! ஒரு சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 உயிர்களை மீட்ட போது எப்படி ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம்.ஆனால் இந்தியா என்ற சுரங்கத்திற்குள் இருந்து இத்தனை கோடி உயிர்களை மீட்க முடியாத இழிநிலையில் சுதந்திர தின மூவர்ண பல்லி மிட்டாய்களும்,குடியரசுதின பைக் சாகச கொண்டாட்ட செலவினங்கள் எதற்கு? 
 
ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, ஃபேஷன் ஷோ எதுக்கு? இப்படி நூறாயிரம் கேள்விகளில் தூக்கம்  தொலைந்தது. நானோ,kpy பாலாவோ,அறந்தாங்கி நிஷாவோ இன்னும் சிலரின் உண(ர்)வு பொட்டலங்கள் செய்திக்கு செய்தி சேர்க்குமே தவிற, அடுத்த வேளை அடுப்புக்கு நெருப்பும்,அதில் பொங்க அரிசியும் சேர்க்காது.
சமீபத்தில் கீர்த்தனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்… இன்னும் 50 ஆண்டுகளில் என் காலத்திற்கு பிறகும் இந்தியாவிலேயே பறக்கும் கார்கள்(இப்போது மிதக்கும் கார்கள்) போன்ற அதியற்புத வளர்ச்சியை காணலாமென. 
 
அதை விட…
இந்திய வரைபடத்தில்,
வறுமை கோடும் அதனடியில் சில 
எலும்புக் கூடும் வாழும் நிலை மாற வேண்டும். 
 
(நான் குற்றஞ்சுமத்துவது அரசியல்வாதிகளை அல்ல. பொருளாதாரம் சார்ந்த அரசியலை. அதை சீர் செய்ய தொலைநோக்குள்ள தன்னலமற்றவர்கள் தகுதி பெற வேண்டும்!) இது ஒரு தனிமனித சிந்தனை எனவே தவறு இருக்கலாம்.இருப்பின் பொருட்படுத்தாதீர்கள்.  இன்றும் இயன்றதைச் செய்து இடர் குறைப்போம்!
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்