தடுப்பூசி போட்டதால் 2 வயது குழந்தை இறந்ததா? திருப்பத்தூரில் பெரும் பதட்டம்..!

Mahendran

வியாழன், 25 செப்டம்பர் 2025 (12:08 IST)
திருப்பத்தூரில் இரண்டு வயது குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்ட பிறகு உயிரிழந்ததாக கூறி, குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
வாணியம்பாடி அருகே உள்ள பெருமாள்பேட்டை, ஊசி தோப்பு பகுதியை சேர்ந்த விக்னேஷ் - கிருத்திகா தம்பதியரின் இரண்டு வயது மகன் பூமீஸ். நேற்று அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற முகாமில் குழந்தைக்கு இரண்டு வயதுக்கான தடுப்பூசி போடப்பட்டது.
 
இதன் பின்னர், குழந்தையை காலையில் எழுப்ப முயன்றபோது அது எழவில்லை. உடனடியாக, பெற்றோர் குழந்தையை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 
குழந்தையின் உடலை உடற்கூராய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல காவல்துறை முயன்றது. இதைக்கண்டித்த உறவினர்கள், சுமார் 70 கி.மீ தூரம் ஆம்புலன்ஸை துரத்திச் சென்று வழிமறித்தனர். தடுப்பூசி போட்டதால்தான் குழந்தை உயிரிழந்தது என்றும், இதற்கு நீதி வேண்டும் என்றும் கோரி அவர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
காவல்துறையினர் தற்போது உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்