’சசிகலாவும், நானும் அரசியல்வாதி’ - பூரிக்கும் தா.பாண்டியன்

வியாழன், 15 டிசம்பர் 2016 (17:22 IST)
சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினேன். நானும் அரசியல்வாதி, சசிகலாவும் அரசியல்வாதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.


 

முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனையடுத்து தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.

ஆனால், ஜெயலலிதா பதவி வகித்த அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு, அடுத்து யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தொண்டர்கள், கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சசிகலா இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட அதிகப்பட்ச வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

இந்நிலையில், போயஸ் கார்டனில் சசிகலாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் நேற்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், ”ஜெயலலிதா மறைவுக்கு துக்கம் விசாரிக்க சென்றபோது கூட்டம் அலைமோதியதால் யாரையும் சந்தித்துப் பேச முடியவில்லை.

அதனால், தான் இன்று சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினேன்.  நானும் அரசியல்வாதி, சசிகலாவும் அரசியல்வாதி. அங்கு வரும் பல்லாயிரக்கணக்கான மக்களும் அரசியல்வாதி. எது எப்படி இருந்தாலும், மக்கள் சக்தி சசிகலாவுக்கு பின்னால் உள்ளது” என்று கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்