ராஜினாமா செய்யவில்லை எனில்? : முதல்வரை எச்சரித்த ஓ.பி.எஸ்

புதன், 12 செப்டம்பர் 2018 (11:15 IST)
ஊழல் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி ஆகியோரை பதவியிலிருந்து நீக்குவது நல்லது என துணை முதல்வர் ஓ.பி.எஸ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 
குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரும், உள்ளாட்சி துறை தொடர்பான அரசு ஒப்பந்தங்களை தனது பினாமிகள், உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு வழங்கி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் அமைச்சர் வேலுமணியும் ஆதாரத்துடன் சிக்கியுள்ளனர். ஆனாலும், தாங்கள் எந்த தவறு செய்யவில்லை என அவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்காமலும், அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்காமலும் முதல்வர் பழனிச்சாமி அமைதி காத்து வருகிறார்.
 
ஆனால், இருவரையும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதோடு, விசாரணையும் நடத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். அதுபோக, அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக தரப்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், திமுக தரப்பு நீதிமன்றம் செல்லும் எனத் தெரிகிறது.

 
எனவே, விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி ஆகியோரிடமிருந்து அமைச்சர் பதவிகளை பிடுங்குவது நல்லது என பழனிச்சாமியிடம் ஓ.பி.எஸ் தொடர்ந்து கூறி வருகிறாராம். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இப்படி ஊழல் குற்றசாட்டு வந்தால் உடனடியாக அமைச்சர் பதவி பிடுங்கப்படும். அவர்களுக்கு எதிரான ஆதரங்கள் வலுவாக இருக்கிறது. நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது. எனவே, அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குங்கள் என ஓ.பி.எஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.
 
ஆனால், நான் அம்மா இல்லை. நான் அவர்களிடமிருந்து அமைச்சர் பதவிகளை பிடுங்கினால், அவர்கள் நமக்கு எதிராக ஊடகங்களில் பேசுவார்கள். எதிராக செயல்படுவார்கள். ஏன்? டிடிவி தினகரன் பக்கம் கூட சென்று விடுவார்கள். ஏற்கனவே, 18 எம்.எல்.ஏக்களினால் நமக்கு நிம்மதி இல்லை. எனவே, இது சிக்கலை ஏற்படுத்தும். அவர்கள் குற்றம் செய்தார்கள் என நிரூபிக்கட்டும். அதன் பின்னர் என்ன செய்வதென்று யோசிப்போம். அதுவரை அமைதியாக இருப்போம் என்கிற ரீதியில் முதல்வர் பேசினாராம்.

 
அதற்கு ஓ.பி.எஸ் “நீங்கள் இன்னும் 3 வருடங்கள் ஆட்சி நீடிக்க வேண்டும் என மட்டும் நினைக்கிறீர்கள். நானோ அடுத்து ஆட்சியும் நம்முடையதாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என கோபமாக பேசினாராம். ஆனாலும், முதல்வர் தரப்பில் எந்த ரியாக்‌ஷனும் இல்லையாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்