சசிகலாவின் தலைமையை எதிர்த்து ஓபிஎஸ் பேட்டியளித்த பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுபட்டது. இதனையடுத்து மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு பெருகியது.
ஆனால் சசிகலா அணிக்கு தொடர்ந்து சறுக்கல்களாகவே நடந்து வந்தது. சசிகலா சிறைக்கு சென்றார், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது, தினகரன் மீதான வழக்குகள் வேகம் எடுத்தன, ஆர்கே நகர் தேர்தல் நிறுத்தப்பட்டது, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை, தினகரன் மீது தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக புதிய வழக்கு பதிவு என அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வருகிறது சசிகலா தலைமையிலான அதிமுக.
இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் தான் தற்போதைய அரசியல் நெருக்கடியில் இருந்து கட்சியை மீட்டெடுக்க முடியும் என அதிமுக அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர். இதனால் இரு அணியினரும் பேசுவார்த்தை நடத்தி இணைய சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் சசிகலா குடும்பம் கட்சியில் இருந்து விலகினால் தான் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஓபிஎஸ் அணி கண்டிப்புடன் கூறியுள்ளது.