சரக்கு குடிச்சிருந்தார்.. தமிழும் தெரியல..! வடக்கு கேட் கீப்பர் மீது பொதுமக்கள் புகார்!

Prasanth K

செவ்வாய், 8 ஜூலை 2025 (11:49 IST)

கடலூர் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கேட் கீப்பர் மீது மக்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

 

கேட் கீப்பர் ரயில் வரும்போது கேட்டை மூடாமல் இருந்ததே காரணம் என கூறிய பொதுமக்கள் கேட்கீப்பரை கடுமையாக தாக்கியிருந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை கைது செய்துள்ளனர். மேலும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

ரயில்வே அளித்த விளக்கத்தில் கேட் கீப்பரை கேட்டை மூட வேண்டாம் என பள்ளி வேன் டிரைவர் வலியுறுத்தியதால்தான் விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் கேட் கீப்பர் எதற்காக வேன் டிரைவர் பேச்சை கேட்டு கேட்டை மூடாமல் இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், பெற்றோர்கள் கேட் கீப்பர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அந்த கேட் கீப்பர் மது அருந்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்ததாகவும், அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தாங்கள் பேசுவதும் புரியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

 

மேலும் இதுபோன்ற பணிகளில் அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களை பணியமர்த்த வேண்டும் என்றும், ரயில்வேயின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாகவும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம் நிவாரணமாகவும் ரயில்வே அறிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்