சென்னையில் கொரோனா அதிகரித்த சமயம் கோயம்பேடு மார்க்கெட் மூலம் அதிகமாக பரவியதால் மே முதல் கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அதனை தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய துணை முதல்வர் கோயம்பேடு சந்தையில் கடைகளை ஒவ்வொரு கட்டமாக திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உணவுப்பொருள் மொத்த அங்காடிகள் அடுத்த மாதம் 18ம் தேதியும், காய்கறி கடைகள் அடுத்த மாதம் 28ம் தேதியும் தொடங்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயம்பேட்டிற்குள் அனுமதிக்கப்படும் எனவும், சில்லரை விற்பனையாளர்கள் கொள்முதலுக்கு வரும் வாகனங்கள் 12 மணி வரை அனுமதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.