தனிக்கட்சி தொடங்கும் தினகரன்: ஓபிஎஸ் பதிலடி!

செவ்வாய், 16 ஜனவரி 2018 (17:02 IST)
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கிவைத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தினகரன் தனிக்கட்சி தொடங்க உள்ளதற்கு பதில் அளித்துள்ளார்.
 
இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு கிடைத்ததால் அதிமுக கட்சியையும் அவர்கள் கைப்பற்றிவிட்டனர். இதனால் பல எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அவர்கள் பக்கம் உள்ளனர். தினகரன், சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கி, ஒதுக்கி வைத்துள்ளனர்.
 
ஆனாலும் தினகரன் தனன்னுடைய ஆதரவாளர்களை வைத்துக்கொண்டு தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவர்கள் மூலமாக ஆளும் தரப்புக்கு நெருக்கடிகளையும் கொடுத்து வருகிறார்.
 
இந்நிலையில் தினகரன் ஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு அமோகமாக வெற்றிபெற்றார். இதனையடுத்து தினகரன் தனி கட்சி ஒன்றை ஆரம்பிக்க போவதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் தினகரன் இதனை தொடர்ந்து மறுத்து வந்தார்.
 
இந்நிலையில் புதுவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், எம்ஜிஆரின் பிறந்த நாளான ஜனவரி 17-ஆம் தேதி, அதாவது நாளை தனது அடுத்த அரசியல் நகர்வு குறித்தும், தனிக்கட்சி தொடங்குவது குறித்தும் அறிவிப்பேன் என தெரிவித்தார்.
 
இந்நிலையில் இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கிவைத்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தினகரன் தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், யார் தனிக்கட்சி தொடங்கினாலும் கவலையில்லை என்றார். உண்மையான அதிமுக தொண்டர்கள் தங்களுடன் எப்போது இருப்பார்கள் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்