நாமக்கல் மாவட்டம் குருசாமிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி தனம். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகளான விஜயா என்பவருக்கும், சாமுவேல் என்பவருக்கும் பல நாட்களாக தகாத உறவு இருந்துவந்துள்ளது.
காலப்போக்கில் விஜயாவின் சகோதரி மகளான வசந்தியை தவறான நோக்கத்தில் அணுகியுள்ளார் சாமுவேல். இதனால் தர்மபுரியில் வசித்து வந்த வசந்தி, நாமக்கல் குருசாமிப்பாளையத்தில் உள்ள பாட்டி தனம் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து வசந்தியை கடத்த திட்டமிட்டு தனம் வீட்டிற்கு சாமுவேல் வந்துள்ளார். வசந்தியை தன்னிடம் அனுப்புமாறு தனத்தை மிரட்டியுள்ளார். வசந்தியை சாமுவேல் கடத்த முயன்றபோது தனம் சாமுவேலை தடுக்க முயன்றதாகவும், பின்பு சாமுவேல் தன்னுடன் வைத்திருந்த ஆசிட்டை தனத்தின் முகத்தில் ஊற்றியதாகவும் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே தனம் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.