சுவாதியின் உடலை பார்த்த முதியவர் அதிர்ச்சியில் மரணம்
வியாழன், 30 ஜூன் 2016 (08:13 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ஆம் தேதி காலை 6:30 மணியளவில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் உடலை பார்த்த 70 வயதான முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே அதிர்ச்சியில் மரணமடைந்த செய்தி கிடைத்துள்ளது.
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஆதிகேசவன்(70) அவர் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஸ்டீல் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்தவர். வேலைக்கு செல்ல வழக்கமாக 8:30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அவர் வருவார்.
இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று 8:30 மணியளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்த அவருக்கு சுவாதியின் உடலை பார்த்ததும் அதிர்ச்சியில் நெஞ்சுவலி வந்துள்ளது. அவர் வலியில் துடித்தவாறே அருகில் உள்ள சுவரில் சாய்ந்துள்ளார்.
அப்போது சம்பவ இடத்தில் இருந்த ரயில்வே காவலர்கள் முதியவர் ஆதிகேசவனுக்கு எந்த முதலுதவியும் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், அவரது மகனுக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள்.
அவரது மகன் வந்த பின்னரே அவரை அருகில் உள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறினர்.
இந்நிலையில் தனது தந்தையின் மரணத்துக்கு காரணம் ரயில்வே காவலர்களே என அவர் குற்றச்சாட்டியுள்ளார். சுவாதியின் உடலை பார்த்த அதிர்ச்சியில் நெஞ்சுவலி வந்த எனது தந்தைக்கு அங்கிருந்த காவலர்கள் ஏதாவது முதலுதவி செய்திருந்தால் எனது தந்தை உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு உண்டு என அவர் கூறினார்.