ஜெயலலிதா வீடியோ வெளியானதற்கும் தினகரனுக்கும் தொடர்பில்லை!

புதன், 20 டிசம்பர் 2017 (13:08 IST)
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த வீடியோ ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ ஆர்கே நகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தற்போது வெளியாகி உள்ளது.
 
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த நேரத்தில் உள்ள வீடியோவை தற்போது வெளியிட்டதற்கு காரணம் ஆர்கே நகர் தேர்தலை மனதில் வைத்து தான் என அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதே நேரத்தில் தேர்தல் நடத்தை விதியை மீறி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
 
126(பி) சட்ட விதியின் கீழ் இந்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆர்கே நகர் தேர்தல் ரத்தாகவோ, தினகரன் தகுதி நீக்கம் செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆனால் இந்த வீடியோ வெளியானதற்கும் தினகரனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும், அவர்களது அனுமதி இல்லாமல் தனது சுய உந்துதலாலே இந்த வீடியோவை வெளியிட்டதாக வெற்றிவேல் கூறியுள்ளார். ஆர்கே நகர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினர் தான் கொன்றதாக துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர். அந்த மன உளைச்சலால் தான் இந்த வீடியோவை தான் வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த வீடியோ வெளியானதற்கும், தினகரனுக்கும் தொடர்பு இல்லை என அவர் தெளிவாக கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்