மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணிகளை உறுதி செய்து களத்தில் இறங்கி வேலை செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. திமுகவில் காங்கிரஸ் தவிர ஏனைய கூட்டணி, தொகுதி பங்கீடுகள் உறுதி செய்யப்பட்டுவிட்டது. பாஜகவிலும் ஏறத்தாழ சமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் உறுதியாகிவிட்டது. அதிமுக பக்கம் இன்னும் சரியான கூட்டணி அறிவிப்புகள் வெளியாகாவிட்டாலும் தொடர்ந்து பிறக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் ஓபிஎஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்ற கேள்வி எழுந்தது. அவர் தனது ஆதரவாளர்களை கொண்ட கூட்டணிக்கான பேச்சுவார்த்தை குழுவையே இன்றுதான் அமைத்துள்ளார். அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதிமுக இன்னும் பாஜக கூட்டணியில்தான் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிதான் பாஜக கூட்டணியிலிரிந்து விலகியுள்ளார் என பேசி வந்தார்.
பாஜகவுடனான கூட்டணி பேச்சு வார்த்தையிலும் தாமரை சின்னத்தில் நிற்பதாக இருந்தால் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு தொகுதிகள் தருவதாக டீல் பேசியதாக கூறப்படுகிறது. வேறு எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் சின்னம், கொடி இல்லாத ஓபிஎஸ் அணி கூட்டணி கட்சியின் சின்னத்தில்தான் நின்றாக வேண்டிய கட்டாயம்.
இந்நிலையில் இன்று வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர், மனோஜ்பாண்டியன், மருது அழகுராஜ், ஆர் தர்மர், புகழேந்தி ஆகிய 7 பேர் கொண்ட கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பாஜகவுடனே கூட்டணிக்கு முயற்சிக்க உள்ளதாகவும், ஆனால் தாமரை சின்னத்தில் அல்லாமல் தனி சின்னத்தில் நிற்க திட்டமிட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.