என்னை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை: மீண்டும் அதிரடி அரசியலில் தினகரன்!

சனி, 3 ஜூன் 2017 (11:25 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.


 
 
முன்னதாக தினகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சமயம் அவரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அதிமுக அமைச்சர்கள் கூறினர். தினகரனும் கட்சியின் நலன் கருத்து ஒதுங்கி இருக்கப்போவதாக கூறினார்.
 
ஆனால் ஜாமீனில் வெளியே வந்துள்ள தினகரன் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார். டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பும் வழியில் டெல்லி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், என்னை கட்சியில் இருந்து யாரும் நீக்க முடியாது. என்னை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை. நான் தான் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர். பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்டவன்.
 
சென்னை திரும்பியதும் கட்சிப்பணிகளில் என்னை மீண்டும் ஈடுபடுத்திக்கொள்வேன். எனக்கென்று கட்சியில் தொண்டர்கள் உள்ளனர். தொண்டர்களுக்காக நான் கட்சிப்பணி செய்தாக வேண்டும் என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்