சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த ஆகஸ்ட்28-ம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கலந்து கொண்ட மகாவிஷ்ணு, பாவ - புண்ணிய பலன்கள், குருகுலக் கல்வி முறை ஆகியவை மட்டுமின்றி, மாற்றுத் திறனாளியாக பிறக்க முன்ஜென்ம பாவங்களே காரணம் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் மீது ஏராளமான புகார்கள் வந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை, விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை, வரும் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மகாவிஷ்ணு குறித்து சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்பி தயாநிதிமாறன், இப்போது கஷ்டப்படுவதற்கு போன ஜென்மத்தில் செய்த பாவம் என பள்ளிக்கூடத்தில் ஒருவர் பேசியுள்ளார், அதை நம்மால் ஏற்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
நம் பிள்ளைகளை பள்ளிக் கூடத்தில் நாம் படிக்க வைப்பதே அவர்கள் படித்து முன்னேறி அறிவியல்பூர்வமாக சிந்தித்து அடுத்த தலைமுறையை முன்னேற்றுவார்கள் என்பதற்காகத்தான் என்றும் எவ்வளோ பெரியார் வந்தாலும் இந்த மாதிரி ஒருத்தன், ரெண்டு பேரு வந்து நம்மை பின்னுக்குத் தள்ளி மூடநம்பிக்கையில் மூழ்கடிச்சிடுவாங்க என்றும் அவர் கட்டமாக தெரிவித்தார்.