ஆடியோவில் இருப்பது நிர்மலா தேவி குரல்தான் - ஆய்வில் நிரூபணம்

செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (17:32 IST)
கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் பேசியது பேராசிரியர் நிர்மலாதான் என்பது ஆய்வில்  நிரூபணம் ஆகியுள்ளது.

 
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்ட கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர்.  
 
இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்க்கு துணை பேராசிரியர் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் உதவியதாக சிபிசிஐடி போலீசார் சந்தேகம் அடைந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட இருவரும் திடீரென தலைமறைவானதால் போலீசாரின் சந்தேகம் உறுதியானது. அதில், முருகன் மட்டும் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.  

 
நிர்மலா தேவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், நேற்று அருப்புக்கோட்டையில் உள்ள அவரின் வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.  வீட்டிற்குள் இருந்த முக்கிய ஆவணங்கள், கணிப்பொறி, பென் டிரைவ், மற்றும் அவரின் காரிலிருந்து ஒரு ரகசிய டைரியையும் போலீசார் கைப்பற்றினார்.  அதில், அவருடன் தொடர்பில் இருந்த பல விவிஐபிக்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தொலைப்பேசி எண்கள் கிடைத்திருப்பதாகவும், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகவும் நேற்று செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த ஆடியோவில் உள்ளது பேராசிரியை நிர்மலா தேவியுடையது என நிரூபிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த குரல் சோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிப்படையாக மாணவிகள் பாலியல் நடவடிக்கைக்கு அழைக்கவில்லை என்று பேராசிரியை நிர்மலா தேவி கூறியிருந்தார். இந்நிலையில் குரல் சோதனையில் பேராசிரியை நிர்மலா தேவியுடையது என நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்