சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்தவர் 31 வயது மதிக்கத்தக்க அருண் குமார், இவரது அண்ணனும் அம்மாவும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். அருண் குமாரோ தனது தந்தையுடன் துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக, அருண்குமார் ரம்யா என்கிற பெண்ணை திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணம் ஆன சில நாட்களிலேயே இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக சண்டை சச்சரவு எழுந்துள்ளது.
இதனால் அருண்குமார், கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து சென்னை தி.நகரின் கோட்ஸ் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில், அவர் செக்-அவுட் செய்யும் நேரம் வந்த பின்னும், அவர் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அவரின் அறைக்குச் சென்று, கதவைத் தட்டியுள்ளனர்.
ஆனால் அவர் அறைக்கதவை திறக்காததால், அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கதவை இடித்து திறந்துள்ளனர். உள்ளே சென்று பார்த்தால், பெட்ஷீட்டை கழுத்தில் சுற்றிக்கொண்டு, சீலிங்கில் இருந்த மின்விசிறியில் அருண்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்ததைக் கண்டு அலறியுள்ளனர்.
அருண்குமாரின் தாய், தந்தை அண்ணன் ஆகியோர் வெளிநாட்டில் இருப்பதால் பெரம்பூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாண்டிபஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.