திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் காவல்துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழாவும், தேரோட்டமும் விமர்சையாக நடைபெறுகின்றன. இந்த ஆண்டும் தற்போது திருவிழா சிறப்பாக நடந்து வரும் நிலையில், திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் வருகிற 8ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
தேரோட்டத்திற்கு பல மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் காவல்துறை பல கட்டுப்பாடுகளையும், அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிக சத்தம் எழுப்பக்கூடிய பீப்பீக்கள் போன்றவற்றை ஊதி இடையூறு செய்யக்கூடாது. சாதியை பிரதிபலிக்கும் வண்ண கயிறுகள், கொடிகள், சாதி பெயர் போட்ட டீசர்ட்டுகள் அணிய, பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதி தலைவர்கள் பெயர்களை சொல்லி கோஷம் எழுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேரோட்டத்தின் போது நான்கு ரத வீதிகளிலும் 22 இடங்களில் போலீஸார் கடும் சோதனைகளை நடத்த முடிவு செய்துள்ளனர். ஆயுதங்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரத வீதிகளில் 800 போலீஸார் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
Edit by Prasanth.K