பன்னீருடன் சேர விடக்கூடாது ; நடராஜன் பின்னிய வலையில் சிக்கியிருக்கும் தீபா?

வியாழன், 16 மார்ச் 2017 (15:41 IST)
எந்த காரணத்தைக் கொண்டும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன், ஜெ.வின் அண்ணன் மகள் தீபா அரசியல் ரீதியாக  ஒன்று சேர்ந்து விடக்கூடாது என சசிகலாவின் கணவர் நடராஜன் தீவிரமாக காய் நகர்த்தி  வருவதாக தெரிகிறது.


 

 
சசிகலா குடும்பத்திற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின் அதிமுக இரண்டு அணியாக பிரிந்தது. அதே நேரம், ஏற்கனவே, சசிகலாவை எதிர்த்து அரசியலில் களம் இறங்க தயராக இருந்த தீபா, தனித்து செயல்படுவாரா அல்லது ஓ.பி.எஸ்-ஸுடன் கை கோர்ப்பாரா என்ற சந்தேகம் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எழுந்தது.  
 
அந்நிலையில், ஜெ.வின் சமாதிக்கு சென்றிருந்த போது, திடீரெனெ  தீபாவும் அங்கு சென்றார். நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம் என பேட்டி கொடுத்தார். அதன்பின், நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதையடுத்து, ஓ.பி.எஸ் பக்கம் செல்லாமல் மௌனம் கடை பிடித்தார். ஒரு நாளில் புதிதாக பேரவை தொடங்கி, நான் தனியாக செயல்பட முடிவெடுத்துள்ளேன் எனக் கூறினார். இதில் அதிருப்தியடைந்த அவரின் ஆதரவாளர்களில் பலர் ஓ.பி.எஸ் அணிக்கு சென்றுவிட்டனர்.
 
இந்நிலையில் தீபாவின் முடிவுகளுக்கு பின்னால் ராஜா என்பவர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்தான்  தீபாவின் தற்போதைய டிரைவராக இருக்கிறார். இவர் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் தீபாவிற்கு பல உதவிகளை செய்து வருகிறார். இவரே தீபாவை முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அவரிடம் கலந்து ஆலோசித்த பின்னரே தீபா எந்த முடிவும் எடுப்பார் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தீபாவின் கணவருக்கும் அவருக்கும் இடையேயும் வாக்குவாதம் எழுந்துள்ளது. ஆனால், தீபா அதை பொருட்படுத்தவில்லை எனத் தெரிகிறது.
 
இதில் முக்கியமான விவகாரம் என்னவெனில், அந்த டிரைவர் ராஜாவை, சசிகலாவின் கணவர் நடராஜன், பின்னணியில் இருந்து இயக்குவதாக தெரிகிறது. அவரது திட்டப்படிதான், பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்பட முடிவெடுத்திருந்த தீபாவின் மனதை ராஜா மாற்றியதாக தெரிகிறது.
 
போயஸ் கார்டனுக்கு சசிகலாவை அனுப்பி, அப்படிப்பட்ட ஜெயலலிதாவையே வேவு பார்த்து, 36 வருடங்கள் காத்திருந்து, காய்கள் நகர்த்தி,  காரியம் சாதித்துக் கொண்டவர் அரசியல் சகுனி நடராஜன். அவருக்கு முன்னால் தீபாவெல்லாம் சாதாரணம் என அதிமுகவில் விபரம் அறிந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள்...

வெப்துனியாவைப் படிக்கவும்