தினகரன் சுயேட்சை அல்ல சுயம்பு - மீண்டும் நாஞ்சில் சம்பத்

செவ்வாய், 26 டிசம்பர் 2017 (11:20 IST)
அதிமுகவின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

 
சென்னை ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 
 
அதேபோல் இந்த தோல்வியை அடுத்து, நிர்வாகிகளின் ஆதரவும், மக்களின் ஆதரவும் தங்கள் பக்கம் இருப்பதாக தினகரன் தரப்பு கூறி வருகிறது. மேலும், எடப்பாடி பக்கம் உள்ள சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் தாவி விடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
 
இந்நிலையில், இன்று காலை டிடிவி தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய நாஞ்சில் சம்பத், அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 
தினகரனை சுயேட்சை என கொச்சைப்படுத்தினார்கள். ஆனால், ஒரு சுயம்பு என நிரூபித்துள்ளார். தமிழகத்தை ஆள நினைக்க வேண்டும் என தப்பு கணக்கு போட்ட 3 கட்சிகளும் பிரசர் குக்கரில் வெந்து போய்விட்டது. இந்த வெற்றியைக் கண்டு ஆளும் கட்சி கதி கலங்கி போயுள்ளனர்.
 
அதிமுக நிர்வாகிகள் சிலரை எடப்பாடி தரப்பு நீக்கியிருக்கிறது. கட்சிக்கு துரோகம் செய்தவர்களை நீக்குவது எனில் ஓ.பி.எஸ்-சைத்தான்  முதலில் நீக்க வேண்டும். கட்சியை இரண்டாக உடைத்து, இரட்டை இலையை முடக்கி, டெல்லிக்கு காவடி எடுத்து தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு தினகரன் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை” என அவர் தெரிவித்தார்.

அதேபோல், வருகிற டிசம்பர் 31ம் தேதி நான் அரசியலுக்கு வரமாட்டேன் எனவே ரஜினி அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்