தமிழகத்தில் பாஜக ஒரே ஒரு தொகுதியை கைப்பற்றுவதற்காக கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகிறது என்பதும் ஆனால் அதே நேரத்தில் கடந்த சில மாதங்களாக ஆட்சி தமிழகத்தில் ஓரளவுக்கு வளர்ந்து வருகிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திமுகவில் இருந்து ஒரு சில தலைவர்கள் பாஜகவை நோக்கி செல்வதை இதற்குக் காரணமாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்
இந்த நிலையில் நேற்று தனது தொண்டர்களிடையே பேசிய தமிழக பாஜக தலைவர் எல் முருகன் சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு அளிக்கப்படும் என்று கூறினார். ஏற்கனவே திமுக, அதிமுகவில் இந்த நடைமுறை இருப்பதாகவும் அது தற்போது பாஜகவிலும் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்திருந்தார்
எல் முருகன் அவர்களின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் திமுகவில் சமீபத்தில் இணைந்த நாஞ்சில் சம்பத் ’இன்னோவா கார் அல்ல ஏரோபிளேன் வாங்கி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது என்றும் அவர்கள் ஒரு நாளும் தமிழகத்தில் பிழைக்கவும் முடியாது என்றும் தெரிவித்துள்ளார். நாஞ்சில் சம்பத்தின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது