இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஏராளமான விமான சேவைகள் இருந்து வந்தாலும் பயணிகள் கப்பல் சேவை இல்லாமல் இருந்து வருகிறது. 1983 வரை ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் சேவை இருந்து வந்தது. ஆனால் அந்த சமயம் தொடங்கி இருந்த இலங்கை உள்நாட்டு யுத்தம் காரணமாக பயணிகள் கப்பல் சேவையும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் 40 ஆண்டுகள் கழித்து இரு நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய பயணிகள் கப்பல் சேவை தொடங்குகிறது. இந்த பயணிகள் கப்பல் சேவை அக்டோபர் 12ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் 2 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு இன்று தொடங்கியது. பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு செல்லும் இந்த பயணிகள் கப்பலுக்கு “செரியபாணி” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 150 பேர் வரை இந்த கப்பலில் பயணிக்க முடியும். இந்த கப்பலில் பயணிக்க பாஸ்போர்ட் இ-விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் பயணிக்கும் பயணிகள் தங்களுடன் அதிக பட்சம் 50 கிலோ எடை உள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம். இந்த கப்பலில் பயணிக்க டிக்கெட் விலை ரூ 7500 வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.