ரூ. 2 ஆயிரம் கள்ளநோட்டு கொடுத்து பழங்கள் வாங்கிய நபர்

புதன், 23 நவம்பர் 2016 (16:05 IST)
கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதனால், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பெரும் சிரமம் நீடித்து வருவகிறது.


 

பழைய நோட்டுகளை மாற்றினாலும், 2000 நோட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் விடப்படவில்லை.

இந்நிலையில், வேலூரில் கள்ள 2000 ரூபாய் நோட்டு நடமாடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் மாங்காய் மண்டியில் பழக்கடை வைத்திருக்கும் வீரா என்பவரின் கடையில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள 2000 ரூபாய் நோட்டு கொடுத்து பழங்களை வாங்கிக்கொண்டு மீதம் 1,750 ரூபாய் பெற்று சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் 2,000 ரூபாயை வீரா காண்பித்துள்ளார்.

அப்போதுதான் அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. அதற்குள் அந்த வாலிபர் பறந்து சென்றுள்ளார். இதனால், அந்த வியாபாரி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 2,000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து, டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்