பிரபலமான இரும்புக்கை மாயாவி உள்ளிட்ட பல காமிக்ஸ் நாயகர்களை தமிழில் அறிமுகப்படுத்திய முத்து காமிக்ஸ் நிறுவனர் சௌந்தரபாண்டியன் இன்று இயற்கை எய்தினார்.
தமிழ்நாட்டில் காமிக்ஸ் உச்சம் தொட்டிருந்த நாட்களில் பிரபலமான ஹீரோ என்றால் அது இரும்புக்கை மாயாவிதான். இப்போதும் இரும்புக்கை மாயாவி என்றால் தெரியாத தலைமுறையினரே இருக்க முடியாது. அப்படியான புகழ்பெற்ற இரும்புக்கை மாயாவியை முதன்முதலில் தமிழில் பதிப்பித்தவர் முத்து காமிக்ஸ் நிறுவனர் சௌந்தரபாண்டியன்.
1971ம் ஆண்டில் சிவகாசியில் தொடங்கப்பட்ட முத்து காமிக்ஸ் இரும்புக்கை மாயாவி, ஜானி நீரோ, லாரன்ஸ் டேவிட் உள்ளிட்ட பல காமிக்ஸ் நாயகர்களை தமிழில் அறிமுகப்படுத்தியது. பல நூறு காமிக்ஸ் கதைகளை வெளியிட்டுள்ள சௌந்தரபாண்டியனின் மகன் விஜயன் தமிழில் லயன் காமிக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி டெக்ஸ் வில்லர் உள்ளிட்ட பல காமிக்ஸ் நாயகர்களை தொடர்ந்து தமிழில் வெளியிட்டு வருகிறார்.
பிரெஞ்சு, ஆங்கிலம், இத்தாலி, பெல்ஜியன் என பல மொழிகளில் இருந்தும் பல காமிக்ஸ் படைப்புகளை தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்திய சௌந்தர்ராஜன் இன்று இயற்கை எய்தினார். காமிக்ஸ் ரசிகர்கள் பலரும் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.