இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேஸ்வரம் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 2000 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கார்த்திகேயன் என்பவரின் படகு சேதம் அடைந்ததால் நான்கு மீனவர்கள் கடலில் குதித்துள்ளனர். இந்த மரணம் விபத்தினால் ஏற்பட்டது அல்ல; இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலால் உண்டானதாகும். எனவே, இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துவதும், அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வதும், மீனவர்களை சிறையில் அடைப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த மீனவ மக்களும் தமிழக அரசும் மத்திய அரசைப் பலமுறை வலியுறுத்தியும் கூட இதில் உருப்படியான எந்த நடவடிக்கையையும் மத்திய பாஜக அரசு எடுக்க மறுக்கிறது. தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களாக இந்திய வெளியுறவுத்துறை கருதுவதில்லை. அவர்களை இரண்டாந்தர குடிமக்களாகவே கருதுகிறது என்பதே இதற்கு காரணம்.