தண்டோரா முறைக்கு தடை விதிக்க வேண்டும்…ரவிக்குமார் எம்பி வேண்டுகோள்!

திங்கள், 28 ஜூன் 2021 (08:22 IST)

கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்களை படிக்க மாணவர்களுக்கு வலியுறுத்தும் விதமாக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தண்டோரா அடித்துச் சென்றது கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் ‘நவீன காலத்தில் தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்ட நிலையில், தண்டோரா போடும் முறையை ஆசிரியர் ஒருவரே பயன்படுத்துவதும், அதை அமைச்சர் ஊக்குவிப்பதும் வேதனையளிக்கிறது. நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது மே 25ஆம் தேதி 2006 அன்று, அன்றைய திமுக ஆட்சியின் முதல் பட்ஜெட்டின் மீது பேசுகிற நேரத்தில், “திருக்கோயில்களில் பரிவட்டம் கட்டுகின்ற முறை அகற்றப்படும் என்று முதல் நாளிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்கள்.

அது சமூகத்தில் சமூக நீதியை, சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கிறது. இன்றைக்கும் தமிழ்நாட்டில் அரசின் அறிவிப்புகள் பலவற்றை கிராமப்பகுதிகளில் தண்டோரா போட்டு அறிவிக்கின்ற முறை வழக்கத்தில் இருக்கிறது. தொடர்பு சாதன வசதிகள் இன்றைக்குப் பல்கிப் பெருகிவிட்ட நிலையில், நாம் உலக நாடுகளுக்கு இணையாக தொலைத்தொடர்பு வசதிகளில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்த நேரத்தில், தண்டோரா போடுகின்ற முறை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இன்னமும் கீழான நிலையில் வைத்திருப்பதை இந்த உலகுக்குச் சொல்கின்ற முறையாக இருக்கிறது. எனவே, தண்டோரா போட்டு அறிவிப்புச் செய்கின்ற முறையை முற்றாக ஒழித்து உத்தரவிட்டு வரலாற்றில் சிறப்பான ஒரு இடத்தை வகிக்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்என்று அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்குக் கோரிக்கை விடுத்தேன். அந்த கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இப்போதுள்ள அரசு அதை நிறைவேற்றுமா? இதை அரசியல் தலைவர்கள் வலியுறுத்துவார்களா’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்