பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணம் : திரையுலகம் அதிர்ச்சி

ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (11:46 IST)
தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

 
சீமானின் வீர நடை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான நா.முத்துக்குமார் [வயது 41] பத்து ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் 1000க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை இயற்றியுள்ளார். இயக்குநர் பாலு மகேந்திராவிடம் நான்கு வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்துள்ளார்.
 
2013ல் மட்டும், 34 படங்கள், 106 பால்கள், 10 படங்களில் அனைத்து பாடல்களும் எழுதியுள்ளார். தமிழ் இசையமைப்பாளர்கள் இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி வி பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் பணி புரிந்துள்ளார்.
 
தூசிகள், ஆனா ஆவன்னா, நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன், பால காண்டம், குழந்தைகள் நிறைந்த வீடு [ஹைக்கூ] ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
 
2005ஆம் ஆண்டில் கஜினி திரைப்படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த கவிஞருக்கான விருது, தங்கமீன்கள், சைவம் ஆகிய படங்களின் பாடல்களுக்காக இரண்டு முறை தேசிய விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.
 
இந்நிலையில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு இயக்குநர்கள், சக கவிஞர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்