வாடிக்கையாளர்களின் பணத்தை கோடிக்கணக்கில் மோசடி செய்த வங்கி அதிகாரி

திங்கள், 21 ஜூலை 2014 (08:06 IST)
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பலகோடி மோசடி செய்த, வங்கி அதிகாரி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் கல்யாணம், சென்னை காவல் ஆணையர் ஜார்ஜை சந்தித்து, பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். 
 
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
 
சென்னை ஆதம்பாக்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையின் முதன்மை மேலாளராக பணியாற்றிய பரசுராமமூர்த்தி (வயது 57) என்பவர், வங்கி வாடிக்கையாளர் கோமதி என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.61 லட்சம் பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
 
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் நல்லசிவம், துணை ஆணையர் ஜெயக்குமார், உதவி ஆணையர் ஜெயசிங் ஆகியோர் மேற்பார்வையில் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். புகார் கூறப்பட்ட பரசுராமமூர்த்தி நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 
சிறையில் தள்ளப்பட்டுள்ள வங்கி அதிகாரி பரசுராமமூர்த்தி தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ளார். இவர் ஏற்கனவே ராஜபாளையத்தில் வேலை பார்த்தபோது, 2 வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து தலா ரூ.1 கோடி, ரூ.81 லட்சம் மோசடி செய்துள்ளார். அது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் பரசுராமமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பரசுராமமூர்த்தி தற்போது 2 ஆவது முறையாக கைதாகி உள்ளார்.
 
பரசுராமமூர்த்தியின் மோசடி பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா? என்பது குறித்தும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பரசுராமமூர்த்தியை காவலில் எடுத்தும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் தரப்பில் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்