ஏமாந்து வீழ்வான் தமிழன் என்று நினைக்கிறாரா பிரதமர் !

சனி, 21 ஜனவரி 2017 (11:30 IST)
இருள் கொண்ட வானில் இவர்கள் நட்சத்திரங்கள்

இவர்கள் விரல் நுனியில் நாளை திறக்கும் என் வாசல்

என் வாசல் இவர்களின் வரம்

மெரீனா இவர்களின் களம்

போராட்டம் இவர்களின் தவம்

ஒலிக்கும் வேத மந்திரங்ககளால் நாளை என் கதவுகள் திறக்கும்.




என் போராட்டம் எனக்கான போராட்டம்

உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டிற்க்கு  இடைக்கால தீர்ப்பு/அனுமதி  வழங்க முடியாது என்று சொன்ன போது எனக்கான மாணவர் போராட்டம் தன்னெழுச்சி பெற்றது. உச்சநீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்னால் ஏதும் முடியாது என்று நீங்கள் கை விரித்த போது எனக்கான மக்கள் தன்னெழுச்சி பெற்றன. வீதிகள் தொரும் அறப்போராட்டங்கள். வீழ்வான் தமிழன் என்று நினைத்தீரா பிரதமர் அவர்களே !



ஏமாந்து தமிழன் வீழ்வான் என்று நினைக்கிறாரா பிரதமர்

தமிழனை நீங்கள்  சொன்னய்  என்று நினைத்தீர்களா பிரதமர் அவர்களே ! காவிரியில்  அவர்களின்    உரிமைகளை மறுத்தீர்கள். வர்தாவிலும் வறட்சியிலும் மாற்றான் தாய் பிள்ளைகளாய் பார்த்தீர்கள். தமிழன்  வாக்களித்து தேர்தெடுத்த மக்கள்  பிரதிநிதிகளைப் போல தமிழனும் வீரியம் குறைந்தவன் என்று நினைத்தீர்களா !

வாடி வாசல் நிரந்தரமாக திறக்கும் வரை யுத்தங்கள் தொடரும்

முதல்வருடன் ஜல்லிக்கட்டு பிரச்சனைப்  பேச நீங்கள் ஒதுக்கிய ஏழு நிமிடங்களிலே உங்களின் பிம்பம்  தெரிகிறது. முதல் நாள் முடியாதது, அடுத்த நாள் முடிகிறது. அவசரம் அவசரமாய் அவசரச்சட்ட வரைவு.  மெரீனாவின் வீரியம்   டெல்லியை தொட்டவுடன் அவசரச் சட்ட வரைவு குடியரசுத் தலைவர் மாளிகை அடைந்து இருக்கிறது. போராட்டங்களின் பல  பரிணாமங்களுக்கு பிறகு டெல்லி பிச்சை இடுகிறதா ? தமிழன் தன் உரிமையை மடி ஏந்தி பிச்சை கேட்க வேண்டும் டெல்லியின்  குருமார்கள் எதிர்பார்த்தார்களா ? வீழ்வான் தமிழன் என்று நினைத்தீரா பிரதமர் அவர்களே !

தமிழன் காட்டு மிராண்டி தான்

எங்கே இருக்கிறார் சு. ஸ்வாமி.  டெல்லியில் யாருடைய முந்தானையில் ஒழிந்து இருக்கிறார். வரச் சொல்லுங்கள் ! என்  வாசலுக்கு அரவான் களப்பலி தேவைப்படுகிறது. தமிழன் காட்டு மிராண்டி தான் என்பதை நிரூபிக்க  வேண்டி இருக்கிறது. தமிழர் தந்தை பெரியாரின் பிள்ளைகள் இவர்கள். சமூக நீதி பற்றி உலகுக்கு சொன்னவர்கள் தமிழர்கள். அவர்களை சொங்கிகள் என்று நினைத்தீர்களா பிரதமர் அவர்களே !

அது என்ன ஒரு வாரம்

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வரும் அவசரச் சட்டம் தொடர்பாக ஒரு வாரம் எந்த தீர்ப்பும் வழங்க கூடாது என்று மத்திய அரசின் பரிந்துரையை உச்ச நீதிமன்றம் ஏற்றதாகத்  தெரிகிறது. ஒரு வாரத்திற்கு பிறகு ?.  ஜல்லிக்கக்கட்டு தமிழர்களின்  கலாச்சாரம். வாடி வாசலின் சாவியை தமிழர்கள் தான் வைத்து இருப்பார்கள். வாடி வாசலின் சாவியை திருட  வேண்டும் என்று நினைத்தீர்களா பிரதமர் அவர்களே ! ஏமாந்து தமிழன் வீழ்வான் என்று நினைக்கிறாரா பிரதமர் ?


மூடி திறக்கும் கதவுகள் வேண்டாம்

கேளுங்கள் தரப்படும் ! தட்டுங்கள் திறக்கப்படும் ! என்பது எல்லாம் உங்களிடம் எடுபடாது. போராடுங்கள் தரப்படும் ! கூட்டங்கள் காட்டுங்கள், திறக்கப்படும் ! இந்த  அவசரசச் சட்டமும் தாற்காலிகமானது தான். மூடி  திறக்கும் வாடி வாசல் வேண்டாம், அதை தமிழன்  கேட்க வில்லை. அவன் கேட்பது எல்லாம் நிரந்தரமாக திறந்திருக்கும் வாடி வாசல் தான். தமிழன் கேட்பது தயிர் சாதம் நீங்கள் தந்து இருப்பது பானி பூரி.



 


இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
சத்யபாமா  பல்கலைக்கழகம்   
[email protected]

வெப்துனியாவைப் படிக்கவும்